Wednesday 3 January 2024

குலாம் தக்கா பாறை ஓவியங்கள்

           பல ஊர்களுக்குப் போய் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறீர்களே! எங்களையும் கூட்டிப்போய் அவ்வோவியங்களைக் காட்டக் கூடாதா? என எனது பிள்ளைகள் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.ஆபத்து இல்லாத எளிதில் போய் பார்க்கக்கூடிய இடங்களுக்குத்தான் அவர்களைக் கூட்டிப் போகமுடியும். ஏற்கனவே அத்தகைய ஒரு இடத்திற்கு போய் இருக்கிறோம். அது விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலையிலுள்ள பாறை ஓவியங்கள் ஆகும். இந்தமுறை அவர்களை குலாம் தக்காவுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்து நான், எனது மகள் திவ்யா, எனது மகன் தினேஸ் ஆகிய மூவரும் ஒருநாள் காலை கிளம்பிவிட்டோம்.
                   குலாம் தக்கா சிறிய ஊர் , இது திருச்சி - சென்னை சாலையிலுள்ள உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் சாலையின் வலது புறத்தில் உள்ளது. சுமார் 50 வீடுகள் இருக்கும், அனைவரும் இஸ்லாமியர்கள். அவர்களுக்குள் உருதுமொழி பேசிக்கொள்கிறார்கள்.
ஊருக்குள் நுழைந்து கிழக்கே வயல்வெளியைக் கடந்து சென்றால் ஒரு சிறிய குன்று உள்ளது. பெரிய பாறைகள் சில சேர்ந்து இந்தக் குன்றுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மூன்று பாறைகளுக்கும் இடையே 30 பேர் தங்குமளவிற்கு இடவசதி உள்ளது. கிழக்கு நோக்கி , பாறைகளுக்கு இடையே உள்ள பாதையில் சென்றால் இஸ்லாமியர் ஒருவரின் சமாதி பச்சைநிற பட்டுத் துணியால் போர்த்தப்பட்டு, வழிபாடு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. தெற்கு வடக்காக புதைக்கப்பட்ட நிலையிலுள்ள இந்த சமாதிக் கருகில் ஊதுபத்தி, எண்ணெய் விளக்குகள் இருந்தன. இங்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து இந்துக்களும் வந்து வழிபடுவார்களாம். இங்கு அடக்கம் செய்யப்பட்டூள்ளவர் பெயரை ‘எகோன்ஷா' என்றும் 'அலுவாலியா' கூறுகிறார்கள்.

குலாம் என்ற சொல் அடிமை வம்சத்தைக் குறிக்கும் சொல் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு ஒரு காலத்தில் இந்த குலாம் வம்சத்தவர்கள் வசித்து வந்திருக்கலாம். இவர்களின் தலைவனாகவோ, மதக்குருவாகவோ ஏகோன்ஷா என்பவர் இருந்திருக்க வேண்டும்.
முதலில் இவர் சமாதி ஊருக்குள் இருக்கும் பள்ளிவாசல் அருகே இருந்ததாம். பள்ளிவாசலில் வழிபடும்போது ஹஜரத் வாயிலாக ‘இங்கு இருந்தால் எனது உடல் எரிகிறது எனவே எனது உடலை அந்த மலையில் கொண்டுபோய் வையுங்கள்’ என எகோன்ஷா கேட்டுக் கொண்டதினால் இவர் உடலை அந்த மலையில் புதைத்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

இவர் சமாதியின் மேற்குப்புற பாறையில் , உச்சியில் செந்நிறப் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கீழே இருந்தே இவ்வோவியங்களைப் பார்க்கலாம். நாங்கள் மூவரும் பாறைகளின் மேலே ஏறிச் சென்று அவ்வோவியங்களைப் பார்த்து படமெடுத்துக் கொண்டோம். இந்த ஓவியத்தில் படகுபோன்ற இரு உருவங்களும் அதனருகே ஒன்றுக்கு மேற்பட்ட மனித உருவங்கள் நிற்பது போலவும் உள்ளது. தெளிவாகக் கருத்து கூறமுடியாத வகையில் உருவங்கள் உள்ளன.

இவ்வோவியங்கள் உள்ள பாறைக்கு கீழே , அதாவது நாங்கள் நின்றிருக்கும் பாறையின் மேற்பரப்பில் பல கற்குழிகள் காணப்படுகின்றன. கற்குழிகள் என்றால் பாறையின் மேற்ப்பரப்பில் ஏற்படுத்தப்படும் சிறிய குழி ஆகும். தொண்மைச் சின்னங்களுள் ஒன்றான இந்த கற்குழிகள்(Cupules) அவர்களின் முன்னோர்களின் நினைவாகவோ, வானில்தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பாகவோ, கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப் பட்டதாகவோ இருக்கலாம்.சுமார் ஏழிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள் விட்டம் கொண்ட இந்த கற்குழிகள் வடக்குதெற்காக நான்கும், கிழக்கு மேற்காக நான்கும் மீண்டும் வடக்கு தெற்காக நான்கும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் பத்து குழிகள் மற்றும் ஒன்பது குழிகள் வரிசையாக உள்ளன.
...பாலா

அணைப்பட்டிப் பாறைஓவியங்கள்

 மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் வழியில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை அமைந்துள்ளது. இம்மலை அமைந்துள்ளப் பகுதியில் கல்யாணிப்பட்டி, அணைப்பட்டி எனும் ஊர்களுக்கிடையே அமைந்துள்ள குறுக்குக் கணவாய்ப் பகுதியில் அமைந்துள்ள புடவில் வெள்ளநிறப் பாறைஓவியங்கள் காணப்படுகின்றன. திரு கே.டி.காந்திராஜன் அவர்களிடமிருந்து இவ்வோவியங்களைப்பற்றி அறிந்துகொண்டோம். அணைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் நம்மை இப்புடவிற்கு அழைத்துச் சென்றார். இயற்கையாகவே அமைந்த இக்குகையின் பாறைகளில் ஏராளமான வெள்ளைநிற ஓவியங்கள் காணப்படுகின்றன. மனித உருவங்கள், ஆடு,மாடு, குறியீடுகள் ஆகியவை கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் ஆண், பெண் உருவங்களுக்கிடையே காட்டப்பட்டுள்ள வேறுபாடும், காளைமாட்டைக் குறிக்கப் போடப்பட்டுள்ள திமிலும் குறிப்பிடத்தக்கவை. ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் ஆடும் குழுநடனமும், கையில் ஆயுதத்தை ஏந்தியவாறு விலங்கு ஒன்றின் மீதமர்ந்துக்கொண்டு சண்டையிடும் மனிதன், காளைமாட்டின்மீது ஏறிக்கொண்டு பயணம் செய்யும் மனிதன் ஆகியவையும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. குதிரையின் மீதர்ந்துக்கொண்டு விரைவாகப் பயணம் செய்யும் மனிதனை வரைந்து, குதிரை விரைவாக செல்வதைக் குறிக்க கால்களை வளைத்து வரைந்தமை அவ்வோவியனின் நுணுக்கத்தைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.

Rock paintings in white colour found at Anaippatti near Madurai
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: 1 person

நெகனூர்ப்பட்டி பாறை ஓவியங்கள்

 விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கருகிலுள்ள நெகனூர்ப்பட்டிக்கு அங்குள்ள பாறை ஓவியங்களைக் காணப் போயிருந்தோம். மாலையாகிவிட்டிருந்ததால் இருட்டுவதற்கு முன் பார்த்து விடவேண்டுமே என்ற பரபரப்பில் சென்று கொண்டிருந்தோம். அங்குள்ளவர்களுக்கு இவ்வோவியங்கள் உள்ள பாறையை 'அடுக்கண்கல்' 'அடுக்காங்கல்' என்றால் நன்றாகத் தெரிகிறது. நிறையபேர் வந்து பார்திருப்பார்கள் போலும். பெரிய பாறைகளை அழகாக அடுக்கிவைத்தாற்போல காட்சியளிக்கும் அடுக்கண்கல் இயற்கையின் விநோதங்களில் ஒன்று. இப்பாறையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் கற்படுக்கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றின் மேல் தங்களது பெயரைக் கிறுக்கி வைத்துள்ளனர் சில அறிவிலிகள்.


கற்படுக்கைகளுக்கு மேலே பாறையில் வெள்ளை நிற ஓவியங்கள் காலத்தைக்கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. நின்ற நிலையில் இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு உள்ள மனித உருவமும் காணப்படுகின்றன. சண்டையில் வெற்றிபெற்ற காட்சியை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. அருகில் கையில் எதையோ வைத்துக் கொண்டிருக்கும் மனித உருவமும், விலங்கு ஒன்றின் உருவமும் காணப்படுகின்றன.
பாறையின் முகப்பு பகுதியில் ஒரு கட்டத்தினுள் செதுக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவற்றை விழுப்புரம் திரு வீரராகவன், திருமதி மங்கை வீரராகவன், முனைவர் இராசவேலு ஆகியோர் முதன்முதலில் பார்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு ஆவணத்தில் கட்டுரையாக வந்த செய்தியிலிருந்து கல்வெட்டுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

நெகனூர்ப்பட்டி தமிழ் - பிராமிக் கல்வெட்டு

நெகனூர்ப்பட்டியின் மேற்கே உள்ள ‘அடுக்கண்கல்’ என்ற குன்றின் கீழ்அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் கூரை விளிம்பில் இக்கல்வெட்டு உள்ளது.
காலம் : சுமார் பொ.ஆ 3 – 4 ஆம் நூற்றாண்டு.குகையில் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. கூரையின் உட்புறத்தில் வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள மனித ஓவியங்கள் அழிந்தநிலையில் உள்ளன. பிராமிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடு போடப்பட்டுள்ளது.

பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாய் செக்கந்தண்ணி என்பவள் செய்வித்த பள்ளியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெண்துறவிகள் கந்தி, கவுந்தி என்ற பெயர்கள் வைத்துக் கொள்வதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. எனவே செக்கந்தியும் பெண்ணாக இருக்கக்கூடும்.

‘பெரும்பொகை’ (பெரும்பொகய்) என்ற ஊர் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது ‘பெரும்பொகய்’ என்பதற்கு பெரிய குகை உள்ள ஊர் எனப் பொருள் கொள்ளலாம். இங்கும் சமணப்படுக்கைகள் உள்ள குகை உள்ளது.
இக்கல்வெட்டு தமிழ் - பிராமி எழுத்து வளர்ச்சிநிலையை எடுத்தியம்பும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். கல்வெட்டில் மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளியுடன் காணப்படுகின்றன. அனைத்து எழுத்துகளிலும் தலைக்கட்டு காணப்படுகிறது. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. ‘ப’ எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன. ‘ள’ எழுத்து புகழுர் தமிழ் - பிராமிக் கல்வெட்டை ஒத்துள்ளது.( முனைவர் இராசவேலு)

- பாலா பாரதி




காமயக்கவுண்டன்பட்டி பாறைஓவியங்கள்

 தேனி மாவட்டம்உத்தமபாளையத்திற்கு அருகிலுள்ள காமயக் கவுண்டன்பட்டிப் பாறை ஓவியங்களைப் பார்க்க திரு. காந்திராஜன்தமிழகன் ஐயாவுடன் போயிருந்தோம். ஊருக்கு வெளியே சங்கிலிக்கரடு என்னும் மலைக்குக் கீழே சங்கிலிக்கருப்பர் கோயில் உள்ளது. அக்கோயிலிருந்து பார்த்தால் மலையின் மீது புடவு ஒன்றுத் தெரிகிறது.

வழிமாறி சுற்றித்திரிந்து ஒருவழியாக அப்புடவிற்குப் போய்ச் சேர்ந்தபோது மாலையாகிவிட்டிருந்தது. மேலும் மலை உச்சியில் தேன்கூடுகளும் அச்சுருத்திக் கொண்டிருந்தனஎனவே கேமராவில் பிளாஸ் பயன்படுத்த முடியாத நிலைசத்தமில்லாமல் சில படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரைவாக இறங்க ஆரம்பித்துவிட்டோம்.
நண்பர்களே! இத்தகைய இடங்களுக்குப் போகும்போது காட்டு விலங்குகள் மற்றும் தேனீக்களின் அச்சுருத்தலுக்குத் தக்கவாறு தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் செல்ல வேண்டாம். தேன்கூடு கலைந்தால் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
மனித உருவங்கள்விலங்குகள்படகின்மீது நிற்கும் மனிதன்விலங்கின் மீது உட்கார்ந்த நிலையில் மனிதன்உட்பட பல ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன.
பாலா பாரதி



அருகவேலிப் பாறைஓவியங்கள்

 அருகவேலியில் உள்ள சித்திரக்கல் பொடவு என்னும் குகைப்பகுதிக்கு திரு காந்திராஜன்முனைவர் தமிழகன் ஆகியோருடன் அங்குள்ள பாறைஓவியங்களைப் பார்க்கப் போயிருந்தோம். கடினமானப் பயணமாக இருந்தது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மயிலாடும்பாறையிலிருந்து கிழக்கே கி.மீ தொலைவில் மலையின் அடிவாரத்தில் உள்ளது அருகவேலி எனும் சிற்றூர்.
இவ்வூரின் வடமேற்கு பகுதியிலுள்ள பாறைகளின் வழியாக இம்மலைக்குப் போகலாம். இந்த மலையில் சித்திரக்கல் பொடவு’ என்று அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் குகை உள்ளது. இந்தக்குகையின் பாறைகளில் வெள்ளை மற்றும் செந்நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இங்கு ஒரு குழு ஓவியக்காட்சி சிறப்பானதாகத் தெரிகிறது. அதில் குதிரையின் மீது அமர்ந்து இரு கைகளையும் மேலே தூக்கியவாறும்கையில் ஏதோ ஆயுதமேந்திய வடிவில் ஒரு உருவமும்அதற்கு பின்னால் அதேபோல் குதிரையில் அமர்ந்து கைகளைத் தூககி்யவாறுள்ள மூன்று உருவங்களும் உள்ளன. இக்காட்சி சண்டையில் வெற்றியடைந்துத் திரும்பும் குழுவை நினைவுபடுத்துவதாக உள்ளது.
மற்றொரு தொகுதி ஓவியங்கள் குகையின் மேல்கூரையில் வரையப்பட்டுள்ளன. மனிதஉருவத்தைச் சுற்றிலும் காளைமான்கள்மாடுகள்கேளஆடுமுயல்கோழிகளின் உருவங்கள் உள்ளன. அவற்றில் சில வெள்ளை நிறத்தால் நிரப்பப்பட்டும்சில கோட்டுருவங்களாகவும் காணப்படுகின்றன.
இவ்வோவியங்களை கண்டறிந்த புதுச்சேரிப் பல்கலைகழக பேராசிரியர் திரு பாலமுருகன் இவ்வோவியங்கள் இரும்பு காலத்தை (பொ.ஆ.மு 1500 - 500) சேர்ந்தவையாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார். இத்தொகுதி ஓவியங்களின் காலத்தை கணித்த பாறை ஓவியங்கள் ஆய்வாளர் திரு கே.டி.காந்திராஜன் அவர்கள் இவை புதியகற்காலத்தைச் (NEOLITHIC PERIOD) சேர்ந்தவையாக இருக்கலாம் அதாவது பொ.ஆ.மு 4000 - பொ.ஆ.மு 1000 காலகட்டம். இக்கருத்துக்குரிய தொல்லியல் சான்றுகள் அருகில் கண்டறியப்படவில்லை என்றாலும்ஓவியத்தின் அமைப்பை(STYLE) வைத்துக் காலத்தைக் கூறுவதாகத் தெரிவிக்கிறார்.
இக்குகையைச் 'சித்திரக்கல் புடவுஎன இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். சித்திரம் - ஓவியம்புடவு - குகை அதாவது ஓவியங்கள் வரையப்பட்ட குகை என்று பொருள்.
(Rockart at Arugaveli, Theni Dist. Tamilnadu)
பாலா பாரதி





கோவனூர் பாறைஓவியங்கள்

கோவனூர் பாறைஓவியங்களைப் பார்க்க திரு காந்திராஜன் அவர்களிடம் அலைபேசியில் வழியைக் கேட்டுக்கொண்டேஏதோ நம்பிக்கையில்தனியாகப் போயிருந்தேன். கோவை பெரியநாயக்கன் பாளையத்திலிருந்து கோவனூர் சென்று அங்கிருந்து பாலமலையில் ஏற வேண்டும். பயந்தது போலவே வழிமாறி காட்டுக்குள் சுற்றித்திரிந்து ஒருவழியாக பூங்கோலம்மன் கோயிலைக் கண்டுபிடித்தோம். அது பெரிய கோயிலாக இல்லாமல் சிறிய வழிபாட்டுத்தளமாக இருந்தும் அங்கே செல்லப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டும் இருந்தன. நம்மை அவ்வூர்காரர்கள் அவ்விடத்திற்கு அழைத்துச்சென்றார்கள்.

வெள்ளைநிறத்தில் வரையப்பட்ட மனிதவிலங்கின உருவங்கள் காணப்படுகின்றன. எருதுகள்ஆடுகள்மான்கள்யானைகள்மான்கூட்டத்தை கையில் அம்பை வைத்துக்கொண்டு
வேட்டையாடும் மனிதர்கள் என சுமார் 50 லிருந்து 60 உருவங்கள்வரை காணப்படுகின்றன. இவற்றில் சிறப்பானதாக வாய் திறந்தநிலையில் புலி ஒன்றும் உள்ளது.
கோயிலுக்குள் போகவேண்டுமெனில் ஓவியங்கள் உள்ள பாறையின் கீழேயே ஒருஆள் போகுமளவிற்கு உள்ள நுழைவுவாயில் வழியே தவழ்ந்தவாறு உள்ளே செல்லவேண்டும். பாறைஓவியங்களைப்பற்றி தெரியாததால் கோயிலுக்கு மேலே பாறையில் சுண்ணாம்பு அடித்துப் பல ஓவியங்களை மறைத்துவிட்டனர்.
குறும்பபாளையம் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஜயராகவன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காந்திராஜன் அவர்களால் ஆய்வு செய்யப்பட்டும் வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளது காலத்தை கடந்து கம்பீரமாக நிற்கும் இவ்ஓவியங்கள்.

பாலா பாரதி






Monday 1 January 2024

ஆலம்பாடிப் பாறைஓவியங்கள்

விழுப்புரத்திலிருந்து திருகோவிலூர் செல்லும் சாலையில் 23 ஆவது கிலோ மீட்டரில் உள்ள சிறிய ஊர் ஆலம்பாடி. இவ்வூருக்கு வெளியே மானாவாரிக் கொல்லையின் நடுவில் அமைந்த குன்றில் பாறைஓவியங்கள் காணப்படுகின்றன.
இங்கு விலங்கின ஓவியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அவற்றுள் மான், காளைமாடு, பன்றி போன்ற ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.
மான் கூட்டமொன்று புல்வெளியில் நுழைவது போன்ற ஓவியம் காணப்படுவது சிறப்பு. சிறிய மானுருவம் ஒன்று மிக அழகாக வரையப் பட்டுள்ளது. இங்கு இரண்டு அடுக்கு வண்ணப்பூச்சு முறையையும் காணமுடிகிறது, இதனால் தொன்மையான ஓவியங்களின் எஞ்சிய தடயங்கள் மீது மீண்டும் மீண்டும் ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
மேலும் இங்குப் பல்லிபோன்ற வடிவில் பெரிதாக வரையப்பட்ட ஓவியமும் முகமூடி போன்ற ஓவியமும் உள்ளன.
- பாலா பாரதி