விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கருகிலுள்ள நெகனூர்ப்பட்டிக்கு அங்குள்ள பாறை ஓவியங்களைக் காணப் போயிருந்தோம். மாலையாகிவிட்டிருந்ததால் இருட்டுவதற்கு முன் பார்த்து விடவேண்டுமே என்ற பரபரப்பில் சென்று கொண்டிருந்தோம். அங்குள்ளவர்களுக்கு இவ்வோவியங்கள் உள்ள பாறையை 'அடுக்கண்கல்' 'அடுக்காங்கல்' என்றால் நன்றாகத் தெரிகிறது. நிறையபேர் வந்து பார்திருப்பார்கள் போலும். பெரிய பாறைகளை அழகாக அடுக்கிவைத்தாற்போல காட்சியளிக்கும் அடுக்கண்கல் இயற்கையின் விநோதங்களில் ஒன்று. இப்பாறையில் இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் கற்படுக்கைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றின் மேல் தங்களது பெயரைக் கிறுக்கி வைத்துள்ளனர் சில அறிவிலிகள்.
கற்படுக்கைகளுக்கு மேலே பாறையில் வெள்ளை நிற ஓவியங்கள் காலத்தைக்கடந்து கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. நின்ற நிலையில் இரண்டு கைகளையும் மேலே தூக்கியவாறு உள்ள மனித உருவமும் காணப்படுகின்றன. சண்டையில் வெற்றிபெற்ற காட்சியை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது. அருகில் கையில் எதையோ வைத்துக் கொண்டிருக்கும் மனித உருவமும், விலங்கு ஒன்றின் உருவமும் காணப்படுகின்றன.
பாறையின் முகப்பு பகுதியில் ஒரு கட்டத்தினுள் செதுக்கப்பட்டிருக்கும் பழந்தமிழ் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. இவற்றை விழுப்புரம் திரு வீரராகவன், திருமதி மங்கை வீரராகவன், முனைவர் இராசவேலு ஆகியோர் முதன்முதலில் பார்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனர். 1995 ஆம் ஆண்டு ஆவணத்தில் கட்டுரையாக வந்த செய்தியிலிருந்து கல்வெட்டுச் செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
நெகனூர்ப்பட்டி தமிழ் - பிராமிக் கல்வெட்டு
நெகனூர்ப்பட்டியின் மேற்கே உள்ள ‘அடுக்கண்கல்’ என்ற குன்றின் கீழ்அடுக்கில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் கூரை விளிம்பில் இக்கல்வெட்டு உள்ளது.
காலம் : சுமார் பொ.ஆ 3 – 4 ஆம் நூற்றாண்டு.குகையில் படுக்கைகள் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. கூரையின் உட்புறத்தில் வெண்மை நிறத்தில் தீட்டப்பட்டுள்ள மனித ஓவியங்கள் அழிந்தநிலையில் உள்ளன. பிராமிக் கல்வெட்டு நான்கு வரிகளில் மிகவும் மெலிதாகக் கீறப்பட்டுள்ளது. கல்வெட்டினைச் சுற்றிச் சதுரவடிவில் கோடு போடப்பட்டுள்ளது.
பெரும்பொகை என்ற ஊரைச் சேர்ந்த செக்கந்தி என்பவரின் தாய் செக்கந்தண்ணி என்பவள் செய்வித்த பள்ளியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. பெண்துறவிகள் கந்தி, கவுந்தி என்ற பெயர்கள் வைத்துக் கொள்வதை இலக்கியங்கள் சுட்டுகின்றன. எனவே செக்கந்தியும் பெண்ணாக இருக்கக்கூடும்.
‘பெரும்பொகை’ (பெரும்பொகய்) என்ற ஊர் அதே பெயரில் நெகனூர்ப் பட்டியிலிருந்து 3 கி.மீ. தெற்காக அமைந்துள்ளது ‘பெரும்பொகய்’ என்பதற்கு பெரிய குகை உள்ள ஊர் எனப் பொருள் கொள்ளலாம். இங்கும் சமணப்படுக்கைகள் உள்ள குகை உள்ளது.
இக்கல்வெட்டு தமிழ் - பிராமி எழுத்து வளர்ச்சிநிலையை எடுத்தியம்பும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். கல்வெட்டில் மெய்யெழுத்துக்கள் யாவும் புள்ளியுடன் காணப்படுகின்றன. அனைத்து எழுத்துகளிலும் தலைக்கட்டு காணப்படுகிறது. இகர உயிர்க்குறி வளைத்து இடப்பக்கமாகச் செல்கிறது. ‘ப’ எழுத்தின் இரண்டு மேல் விளிம்புகளும் சமமாக உள்ளன. ‘ள’ எழுத்து புகழுர் தமிழ் - பிராமிக் கல்வெட்டை ஒத்துள்ளது.( முனைவர் இராசவேலு)
No comments:
Post a Comment