மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உசிலம்பட்டியிலிருந்து விக்கிரமங்கலம் செல்லும் வழியில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை அமைந்துள்ளது. இம்மலை அமைந்துள்ளப் பகுதியில் கல்யாணிப்பட்டி, அணைப்பட்டி எனும் ஊர்களுக்கிடையே அமைந்துள்ள குறுக்குக் கணவாய்ப் பகுதியில் அமைந்துள்ள புடவில் வெள்ளநிறப் பாறைஓவியங்கள் காணப்படுகின்றன. திரு கே.டி.காந்திராஜன் அவர்களிடமிருந்து இவ்வோவியங்களைப்பற்றி அறிந்துகொண்டோம். அணைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் நம்மை இப்புடவிற்கு அழைத்துச் சென்றார். இயற்கையாகவே அமைந்த இக்குகையின் பாறைகளில் ஏராளமான வெள்ளைநிற ஓவியங்கள் காணப்படுகின்றன. மனித உருவங்கள், ஆடு,மாடு, குறியீடுகள் ஆகியவை கோட்டுருவங்களாக வரையப்பட்டுள்ளன. மனித உருவங்களில் ஆண், பெண் உருவங்களுக்கிடையே காட்டப்பட்டுள்ள வேறுபாடும், காளைமாட்டைக் குறிக்கப் போடப்பட்டுள்ள திமிலும் குறிப்பிடத்தக்கவை. ஆண்கள், பெண்கள் குழந்தைகளுடன் ஆடும் குழுநடனமும், கையில் ஆயுதத்தை ஏந்தியவாறு விலங்கு ஒன்றின் மீதமர்ந்துக்கொண்டு சண்டையிடும் மனிதன், காளைமாட்டின்மீது ஏறிக்கொண்டு பயணம் செய்யும் மனிதன் ஆகியவையும் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. குதிரையின் மீதர்ந்துக்கொண்டு விரைவாகப் பயணம் செய்யும் மனிதனை வரைந்து, குதிரை விரைவாக செல்வதைக் குறிக்க கால்களை வளைத்து வரைந்தமை அவ்வோவியனின் நுணுக்கத்தைத் தெரிந்துகொள்ள உதவுகிறது.
No comments:
Post a Comment