Wednesday, 3 January 2024

குலாம் தக்கா பாறை ஓவியங்கள்

           பல ஊர்களுக்குப் போய் பாறை ஓவியங்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறீர்களே! எங்களையும் கூட்டிப்போய் அவ்வோவியங்களைக் காட்டக் கூடாதா? என எனது பிள்ளைகள் என்னைக் கேட்டுக் கொண்டே இருந்தனர்.ஆபத்து இல்லாத எளிதில் போய் பார்க்கக்கூடிய இடங்களுக்குத்தான் அவர்களைக் கூட்டிப் போகமுடியும். ஏற்கனவே அத்தகைய ஒரு இடத்திற்கு போய் இருக்கிறோம். அது விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்வாலையிலுள்ள பாறை ஓவியங்கள் ஆகும். இந்தமுறை அவர்களை குலாம் தக்காவுக்கு அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்து நான், எனது மகள் திவ்யா, எனது மகன் தினேஸ் ஆகிய மூவரும் ஒருநாள் காலை கிளம்பிவிட்டோம்.
                   குலாம் தக்கா சிறிய ஊர் , இது திருச்சி - சென்னை சாலையிலுள்ள உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம் செல்லும் சாலையில் உளுந்தூர்பேட்டையிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர்கள் தொலைவில் சாலையின் வலது புறத்தில் உள்ளது. சுமார் 50 வீடுகள் இருக்கும், அனைவரும் இஸ்லாமியர்கள். அவர்களுக்குள் உருதுமொழி பேசிக்கொள்கிறார்கள்.
ஊருக்குள் நுழைந்து கிழக்கே வயல்வெளியைக் கடந்து சென்றால் ஒரு சிறிய குன்று உள்ளது. பெரிய பாறைகள் சில சேர்ந்து இந்தக் குன்றுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மூன்று பாறைகளுக்கும் இடையே 30 பேர் தங்குமளவிற்கு இடவசதி உள்ளது. கிழக்கு நோக்கி , பாறைகளுக்கு இடையே உள்ள பாதையில் சென்றால் இஸ்லாமியர் ஒருவரின் சமாதி பச்சைநிற பட்டுத் துணியால் போர்த்தப்பட்டு, வழிபாடு செய்யப்பட்ட நிலையில் உள்ளது. தெற்கு வடக்காக புதைக்கப்பட்ட நிலையிலுள்ள இந்த சமாதிக் கருகில் ஊதுபத்தி, எண்ணெய் விளக்குகள் இருந்தன. இங்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து இந்துக்களும் வந்து வழிபடுவார்களாம். இங்கு அடக்கம் செய்யப்பட்டூள்ளவர் பெயரை ‘எகோன்ஷா' என்றும் 'அலுவாலியா' கூறுகிறார்கள்.

குலாம் என்ற சொல் அடிமை வம்சத்தைக் குறிக்கும் சொல் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு ஒரு காலத்தில் இந்த குலாம் வம்சத்தவர்கள் வசித்து வந்திருக்கலாம். இவர்களின் தலைவனாகவோ, மதக்குருவாகவோ ஏகோன்ஷா என்பவர் இருந்திருக்க வேண்டும்.
முதலில் இவர் சமாதி ஊருக்குள் இருக்கும் பள்ளிவாசல் அருகே இருந்ததாம். பள்ளிவாசலில் வழிபடும்போது ஹஜரத் வாயிலாக ‘இங்கு இருந்தால் எனது உடல் எரிகிறது எனவே எனது உடலை அந்த மலையில் கொண்டுபோய் வையுங்கள்’ என எகோன்ஷா கேட்டுக் கொண்டதினால் இவர் உடலை அந்த மலையில் புதைத்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

இவர் சமாதியின் மேற்குப்புற பாறையில் , உச்சியில் செந்நிறப் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கீழே இருந்தே இவ்வோவியங்களைப் பார்க்கலாம். நாங்கள் மூவரும் பாறைகளின் மேலே ஏறிச் சென்று அவ்வோவியங்களைப் பார்த்து படமெடுத்துக் கொண்டோம். இந்த ஓவியத்தில் படகுபோன்ற இரு உருவங்களும் அதனருகே ஒன்றுக்கு மேற்பட்ட மனித உருவங்கள் நிற்பது போலவும் உள்ளது. தெளிவாகக் கருத்து கூறமுடியாத வகையில் உருவங்கள் உள்ளன.

இவ்வோவியங்கள் உள்ள பாறைக்கு கீழே , அதாவது நாங்கள் நின்றிருக்கும் பாறையின் மேற்பரப்பில் பல கற்குழிகள் காணப்படுகின்றன. கற்குழிகள் என்றால் பாறையின் மேற்ப்பரப்பில் ஏற்படுத்தப்படும் சிறிய குழி ஆகும். தொண்மைச் சின்னங்களுள் ஒன்றான இந்த கற்குழிகள்(Cupules) அவர்களின் முன்னோர்களின் நினைவாகவோ, வானில்தோன்றும் நட்சத்திரங்களின் அமைப்பாகவோ, கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப் பட்டதாகவோ இருக்கலாம்.சுமார் ஏழிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள் விட்டம் கொண்ட இந்த கற்குழிகள் வடக்குதெற்காக நான்கும், கிழக்கு மேற்காக நான்கும் மீண்டும் வடக்கு தெற்காக நான்கும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் பத்து குழிகள் மற்றும் ஒன்பது குழிகள் வரிசையாக உள்ளன.
...பாலா

1 comment:

  1. தங்களின் தேடலும், அறியாததை வெளிக்கொணர தாங்கள் மேற்கொள்ளும் அயரா முயற்சியும் போற்றுதலுக்கு உரியது ஐயா.
    வரலாறு என்றென்றும் தங்களை நினைவில் வைத்திருக்கும்
    நன்றி ஐயா

    ReplyDelete