Monday, 25 December 2023

கைஓவியங்கள்

   கை ஓவியங்கள்


                    பிரான்சில் பைரேன்னீஸ் மலைத்தொடரில் கார்காஸ் குகை (Gargas) உள்ளது. இங்கு குதிரை, எருது, காட்டு ஆடு, மான் ஓவியங்களுடன் 289 கை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. 27000 ஆண்டுகள் பழமையான மேல்பழங்காலத்தைச் சேர்ந்த இக் கைஓவியங்கள் கருப்பு, சிவப்பு நிறத்துடன் உள்ளன. வியப்பு என்னவெனில் பல கைகளில் ஐந்து விரல்களும் இல்லை. சில விரல்கள் பாதியாகவும் உள்ளன. இவற்றை ஆராய்ந்த பாறை ஓவியத் துறையின் அப்பே ஹென்றி ப்ருயில், எம்பெரைர் லானிங், அன்றே லெரோய் கூர்ஹான் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் கூறினர். கூர்ஹான் இவற்றைப் பகுத்து ஆராய்ந்து பனிக்கரடியாலோ, விபத்தாலோ, மரபியல் நோயாலோ இச்சிதைவு ஏற்படவில்லை. திட்டமிட்டு சில விரல்களை மடக்கி இவ்விதமாகத் தீட்டி உள்ளனர் என்றார். மேலும், குகை உள்ளே செல்லச் செல்ல சிவப்பு வண்ணக் கைகள் அதிகமாகவும், நுழைவில் கருப்பு வண்ணம் அதிகமாகவும் இருக்கின்றன என்று அறிவித்தார். ஏதேனும் சைகை மொழி (Semaphore) மொழிக் குறியீடா என்று இன்னும் அறிய முடியவில்லை.

பெரிய கை இக்குகையின் அடியாழத்தில் ஒரு குழிவில் ஒரு வரைந்திருக்கிறார்கள். மற்ற கைகள் மனிதர்களின் இயல்பளவில் இருக்க இக்கை மிகப்பெரிதாய் உள்ளது. இந்தக் கை ஏன் குகையின் அடிஆழத்தில் பெரியதாக வரையபட்டிருக்கிறது என்ற கேள்விக்கு பல அறிஞர்களுக்குக் குறிப்பான விடை தெரியாத நிலையில் தொல்வரலாற்றின் போப் என்று கருதப்பட்ட ஹென்றி ப்ரீயுல் (Henri Breuil) என்பவர் புதிய விளக்கம் ஒன்று கொடுத்தார். ஆப்ரிக்காவின் சான் இன மக்கள் இன்னும் கற்கால வாழ்க்கையில் இருந்து பெரிய மாற்றமின்றி கலஹாரி பாலைவெளியில் வாழ்கிறவர்கள். ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளும் அவ்வாறே நாகரிகத் தொடர்பை விட்டு நீங்கி வாழ்கிறார்கள். இவ்விரண்டு பகுதிகளிலிருந்தும் இரு முதியவர்களைத் தனித்தனியாக இக்குகைக்கு அழைத்து வந்து கைஓவியத்தைக் காட்டி இதற்கான விளக்கம் கூற வேண்டினர். வியப்பாக அந்த இரு முதுபழங்குடியினரும் ஒரே பதிலைக் கூறினர். 

        " This hand, as they interpreted it according to their own traditions, was a representation of people reaching for the world beyond. The deepest part of the cave is the end of our world. The hand is reaching for what lies beyond the cave, beyond our world, and is found in the realm of the dead and the ever- after. "

            இந்தக் கை மனிதர்கள் தங்களுக்கு வெளியே நிலவும் உலகை நோக்கி நீள்கின்றன. குகையின் அடியாழம் இந்த உலகின் முடிவு எல்லை. இக்குகையைத் தாண்டி இந்த உலகிற்கும் அப்பால் நிலவும் இறந்தவர்களின் காலம், வெளி நோக்கி இந்தக் கை நீள்கிறது என்றனராம். நமக்குப் புரிகிறவகையில் சொன்னால் மேல் உலகு நோக்கி நீள்கிறது. இவ்விளக்கம் பொதுவான ஆதிப் புரிதலைச் சுட்டுவதாகக் கருத இடமுண்டு.

(Refer. Amir D Aczel-The Cave and the Cathedral-2009, John Wiley &Sons, NJ )

                  பாறைஓவியங்களில் கைஓவியங்கள் புகழ்பெற்றவை. வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த மனிதர்கள் தங்களது வருகையைப் பதிவு செய்யும் பொருட்டு தனது கையின் அச்சை அவ்விடத்தில் பதிந்துச் சென்றிருக்கிறார்கள். இதில் இரண்டுவகையான பதிவுகள் உண்டு. ஒன்று கையை செங்காவி போன்ற குழம்பில் நனைத்து பாறையில் அப்படியே அச்சிப்பதிப்பது, மற்றொன்று பாறையில் கையை வைத்து கையிடுக்குகளில் கோடுகள் போன்று வரைந்து விட்டு கையை எடுத்தால் கை போன்ற வடிவம் கிடைக்கும். இது கோட்டுருவம் ஆகும். இத்தகைய கைஓவியங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி உலகில் உள்ள ஏராளமான பழங்காலப் பாறை ஓவியங்களிலும் காணப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பிரான்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஓவியங்கள் கிடைத்துள்ளன.

        உலகம் முழுவதும் மனிதர்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் திறன் ஒரேமாதிரியாக இருந்துள்ளது இதன்மூலம் தெளிவாகிறது. இதுபோன்ற பாறை ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமின்றி நமக்கும் உள்ளது.  படத்தில் கரிக்கியூர் கைஓவியம்.
இது கூறும் சுருக்கமானச் செய்தி என்னவென்றால்

"நான் இங்கே இருந்தேன்"

                                                                                                            - பாலா பாரதி



No comments:

Post a Comment