கருங்காலக்குடி
கருங்காலக்குடியில் ஒரு புதிர்நிலை கல்வெட்டைத் தேடி கிருஷ்ணகிரி திரு.சுகவன முருகன் , முனைவர் தமிழகன், போஸ் ஐயா, கீரைத் தமிழன் ஆகியோருடன் சமீபத்தில் சென்றிருந்தேன்.நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ள கருங்காலக்குடி தொன்மையின் சின்னமாக விளங்குகிறது.திருச்சியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 35 வது கி.மீ தொலைவில் சாலையின் இடப்புறம் உள்ள அழகான ஊர் கருங்காலக்குடி.
இவ்வூரில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர். ஓட்டு வீடுகளும், திண்ணைகளும் அழகாக இருந்தன.வழியிலுள்ள சிறுசிறு குன்றுகளும், வறண்ட வயல்வெளிகளையும் பார்த்துக்கொண்டே சென்றோம். சிறுகுன்றின் அடிவாரத்திலுள்ள குடிநீர் ஊருணியை மிகவும் சுத்தமாக இந்த ஊர்மக்கள் பாதுகாத்து வருகின்றனர். தண்ணீர் மிகவும் சுவையாக மினரல் வாட்டரைவிட அருமையாக இருந்தது.
தொல்குடிகள், சமணத்துறவிகள் வாழ்ந்த குன்றிற்குச் சென்றோம். குகைத்தளத்தினடியில் படுக்கைகளும், மருந்து அரைப்பதற்கு ஏற்ப குழிகளைச் செதுக்கியிருந்தனர். குகை முகப்பில் தமிழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. அதற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. குகைதளத்தின் மேற்பகுதியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் " ஏழைய்ஊர் அரிதின் பளி" என்று பழந்தமிழில்(பிராமி எழுத்தில்) எழுதப்பட்டுள்ளது
ஏழையூர் என்பது இடையூர் என்பதன் திரிபாக இருக்கலாமென்று ஐராவதம் மகாதேவன் போன்றவர்கள் கருதுகிறார்கள். சிறப்புழகரம் இங்குள்ள கல்வெட்டில் உள்ளது. அரிதின் என்ற முனிவர்க்கு படுக்கைகள் செதுக்கித்தந்ததை குறிக்கிறது.
பஞ்சபாண்டவர் மலையும் அதனை ஒட்டிசெல்லும் பாதையும் வார்த்தையால் வர்ணிக்கமுடியாத அளவு அழகு. சிறிது தூரம் மலைஏறியவுடன் சிறிய சமவெளி அதில் ஓர் பெரிய ஆழமரம், அதன் அருகில் ஒரு சமணர் குகை.பாண்டிய நாட்டு தலைநகரையும்,, சோழநாட்டு தலைநகரையும் இணைக்கும் பெருவழிபாதையில் அமைந்த ஊர் கருங்காலக்குடி, இந்த மலையில் உள்ள கல்வெட்டுகள் கி.பி.10ம் நூற்றாண்டை சேர்ந்தவை, மதுரையை சுற்றியுள்ள மற்ற சமணர் மலைகளில் மகாவீரர் சிலை செதுக்கப்பட்டுள்ளது ஆனால் இங்கு சமணதுறவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண முனிவரின் சிலையொன்று குன்றில் காணப்படுகிறது. சிலையின் கீழ் "ஸ்ரீ அச்சணந்தி செய்வித்த திருமேனி" என்னும் தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது.
சமணத்திற்கு ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பின்னடைவிற்கு பிறகு அச்சணந்தி என்ற சமணத்துறவி கால்நடையாக தமிழகம் முழுவதும் பயணித்து சமணத்துறவிகள் வசித்த இடங்களில் சமணச்சிற்பங்களை வடித்து மீண்டும் சமணம் செழிக்க பாடுபட்டார். வட்டெழுத்துக் கல்வெட்டு தமிழகத்தில் பன்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை எழுநூறு ஆண்டுகள் வழக்கத்தில் இருந்தது. அங்கிருந்து குன்றின் மேலுள்ள பாறை ஓவியங்களைக் காணச் சென்றோம். மலையில் ஏற கிழக்கே படிகள் செதுக்கியுள்ளனர். படிகள் ஏறி மேலேச் சென்றால் குகை போன்றமைந்த மக்கள் வாழ்வதற்கேற்ற சூழலில் பல இடங்களைப் பார்க்க முடிந்தது. இந்த மலையின் குகைகளில் தொல்பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக பல ஓவியங்கள் காணப்படுகின்றன.
அங்குச் செல்ல சிறிது தூரத்திற்குப் பாறையில் படிகள்கு செதுக்கப்பட்டுள்ளது, மலை ஏறுவதற்கு எளிதாக இருந்தாலும் அதன்பின் கிழக்குபக்கம் செல்லும் பாதை வழியாக ஓவியம் உள்ள குகையை அடைய பாதை ஆபத்தானதாகவே இருக்கிறது, சிறிது கவனம் தவறினாலும்100 அடி பள்ளத்தில் விழுந்து விடுவோம்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்த மலையை வரலாற்று சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. எனினும் பாதுகாப்பற்ற நிலைதான் காணப்படுகிறது.
ஒவ்வொருமுறையும் புதிய அனுபவத்தை தருகிறது, எங்கள் பயணம் ஏற்றகனவே சென்றுவந்ததை போல் அல்லாமல் வேறு வேறு புதிய அனுபவத்தை தருவதால் மீண்டும் மீண்டும் புதிய பயணத்தைத் தொடர்கிறேன். அவற்றை பசுமை நினைவுகளாய் மனத்தில் பதிவு செய்து கொண்டு வீடு திரும்பினோம்.அவற்றை உங்களிடம் பகிர்வதிலும் மகிழ்ச்சியே!!!
பயணங்கள் முடிவதில்லை....
பாலா....
பயணங்கள் முடிவதில்லை....
No comments:
Post a Comment