Saturday, 30 December 2023

மால் கொடி

 

நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த 'மால் கொடி' இன்று கிடைத்தது. நண்பர் ஒருவர் மூலம் இக்கொடியை தெரிந்துகொண்டோம். குரும்பர் பழங்குடிகள் தேனெடுக்க ஏணி அமைத்து மலைமுகடுகளை அடைவர். அதற்கு பலவகையான ஏணிகளைப் பயன்படுத்துவர். அதில் ஒன்றுதான் இந்த மால்பு ஏணி. காட்டில் கிடைக்கும் ஒருவகையான கொடியை பிணைத்து இவற்றை உருவாக்குகிறார்கள். இவ்வேணி மால்பு ஏணியாதலால் இக்கொடிக்கு 'மால்பு கொடி' எனப் பெயர் வந்துள்ளது. வழக்கில் 'மாலுக் கொடி' என்கின்றனர்.
ஊயரமான மலைகளில் தேனெடுக்க ‘மால்பினைப்' பயன்படுத்துவர் என்பது,
‘பெருந்தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல’ – (குறுந்தொகை 273)
‘மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும்’ - (புறம் 105)
என்றும் இம்மால்பு நிலையாக இருக்கும் என்பது,
‘நெடுவரை, நிலைபெய்து இட்ட மால்பு நெறியாக பெரும் பயன் தொகுத்த தேங்கொள் கொள்ளை’ - (மலை படுகடாம் 315 – 316)
என்றும் தினைப்புனத்தின் புகையால், ஒளிமங்கிய நிலவு தேனடை எனக்கருதி வேங்கை மரப்பரணிலிருந்து ஏணி அமைந்திருப்பர் என்பது
‘வானூர் மதியம் வரைசேரினவ்வனரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும்’ - (கலித்தொகை 39)
என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இன்றும் திணைக்குடிகள் இம்மால்பைப் பயன்படுத்தித் தேனெடுப்பதைக் காணும்போது வியப்பாக உள்ளது.
- பாலா பாரதி
All reactions:
Jeevithakannan Puranar, Selvam M and 45 others

No comments:

Post a Comment