Sunday, 31 December 2023

சித்தர்மலை, அணைப்பட்டி

             


சித்தர்மலை, அணைப்பட்டி  


                        மதுரையருகே உள்ள மகாலிங்கமலை என்ற சித்தர்மலை மற்றும்  பாறை ஓவியங்களைப் பற்றி திரு கே.டி.காந்திராஜன் அவர்களிடம் தெரிந்துகொண்டு திருச்சியிலிருந்து அங்கு செல்லும்வழி ஆகியவற்றை கேட்டுக்கொண்டு நண்பர்கள் இருவருடன் போயிருந்தேன்.மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் பேரணைப் பகுதியில் மேட்டுப்பட்டி அமைந்துள்ளது. அணைப்பட்டி என்னும் சிற்றூர் அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது.

இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன.


மலைக்குக் கீழே உள்ள தேநீர்கடையில் அவ்வூரைச் சேர்ந்த ஜெயராஜை சந்தித்தோம் அவரும் சித்தர்மலைக்கு வழிகாட்டுவதாக உறுதியளித்தார்.வெகு தொலைவில் மலை அமைந்திருக்கும் இடத்தை காணமுடிந்தது. 
ஜெயராஜ் வழிகாட்ட நண்பர்களிருவரும் கீழேயே இருந்துகொள்ள மலையேறத் துவங்கினோம். மரங்கள் , பாறைகளின் ஊடாக மெதுவாக ஆங்காங்கே ஓய்வெடுத்துக் கொண்டு சென்றோம். பாறையில் கடினமான வழுக்குப் பாறைபோன்ற பகுதிகளில் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருந்தன.
காலைவேளையில் வெயிலின் தாக்கம்  குறைவாக இருந்ததால் மலையேறுவதற்கு எளிதாக இருந்தது. மலையில் ஓரிடத்தில் பிடித்து செல்ல உதவியாக இரும்புக் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு வழியாக மலையில் குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தோம். 
குகைத் தளத்திற்கு செல்வதற்கு வழியில் சிறிதாக சில படிகள் மிக நேர்த்தியாக வெட்டப்பட்டிருந்தது. அதற்கு அருகிலேயே ஓரிடத்தில் பத்துப் படிகளோடு ஒரு மேடை போன்ற அமைப்பு மலையில் அமைக்கப்பட்டிருந்தது. மேடை போன்ற இடத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை வர்ணங்கள் அட்டிக்கப்பட்டு, அதனருகே ஒரு தீபம் ஏற்றும் தூண் ஒன்றும் உள்ளது. இதற்கு சற்று அருகில் தொல்லியல்த் துறையின் பாதுகாப்பு மற்றும் அறிவிப்பு பலகை காணப்பட்டது. இதனை பார்த்துவிட்டு மலைமீது இயற்கையாக அமைந்த குகைத்தளத்தைக் கண்டோம்.
அதில் பத்துக்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டிருந்தது. படுக்கைகளின் மேற்புறத்தில் தலையனை போல காணப்படும் இடத்தில் தமிழி (பிராமி) கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. குகையில் மேற்புறத்தில், அருகேயுள்ள இடங்கள் என பல இடங்களில் இன்றைய காதல் உள்ளங்களின் பெயர்களும் பெயிண்டில் எழுதப்பட்டு அவர்களின் ஒப்பற்ற வரலாறும் பதிவு செய்யப்பட்டிருந்தது. படுக்கையிருக்கும் குகைத் தளத்தினூடாக சற்று உள்ளே சென்றால் மிகப்பெரிய குகையொன்று உள்ளேயிருக்கிறது.


நீளமான குகைத் தளம் ஒன்றைப் பார்த்தோம். இதில் சமணப் படுக்கைககள், கல்வெட்டுகள் காணப்பட்டன. நான் அமர்ந்து கொண்டு இருக்கும் குகைத் தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையணை போன்ற பகுதியில் ந்தமிழ்க் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் இதைச் செதுக்கி தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுகைகள் இப்பெயர்களுக்கு உரியது என்றோ இருக்கலாம்.


1.        அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ
2.        அந்தை அரிய்தி
3.        அந்தை இராவதன்
4.        மதிர அந்தை விஸூவன்
5.        அந்தை சேந்தன் அதன்
6.        சந்தந்தை சந்தன்
7.        பதின் ஊர் அதை
8.        குவிர அந்தை சேய் அதன்
9.        குவிரந்தை வேள் அதன்
10.       திடி இல் அதன்









அமணன் மதிரை அத்திரன் உறை உதயனஸ”.
இதில் அமணன் என்ற சொல் சமணன் என்பதாகும், மதிரை என்பது மதுரை என்பதாகும். இந்தக் குகைதளத்திலிருந்து சிறிது மேலே ஏறிச்சென்றால் மகாலிங்கம் கோயில் என அழைக்கப்படும் சிறிய கோயில் ஒன்றைக் காணலாம்.


           
 இந்த குகைத்தளத்தில் 11 கல்வெட்டுகள் உள்ளன. ஒவ்வொரு படுக்கையிலும் தலையனை போன்ற பகுதியில் தமிழிக் கல்வெட்டு உள்ளது. இப்பெயர்கள் அனைத்தும் இதை செதுக்கி தந்தவர்களின் பெயராகவோ அல்லது இப்படுக்கைகள் இப்பெயர்களுக்கு உரியது என்றோ இருக்கலாம். இந்தப் பகுதியில் உள்ள மக்கள் சமணத் துறவிகளுக்கு உதவியுள்ளதை ’தி டி இல் அதன்’ என்ற கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. உசிலம்பட்டி பகுதியில் திடியன் என்னும் சிற்றூர் இன்றும் உள்ளது. அந்தக் காலத்தில் ’இல்’ விகுதியில் முடியும் பெயர்கள் கொண்ட சிற்றூர்கள் நிறைய உண்டு.
பாண்டிய நாட்டிற்கும் சேர நாட்டிற்குமான பெருவழி இப்பகுதியில் முன்பு இருந்திருக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கு வழியாக இடுக்கி செல்லும் பெரும் பாதை இருந்திருக்கிறது. 

அங்கிருந்து கிளம்பிக் கணவாய் வழியாக வரும்போது சாலையின் இடப்புறம் ஒரு சிறிய குன்றின் குகைத் தத்தில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளன எனக் கேள்விப்பட்டு 
அவற்றைப் பார்க்கப் போனோம்.

சுமார் 10 அடி உயரத்தில் அமைந்திருந்த அந்த குகையில் நிறைய ஓவியங்கள் காணப்பட்டன. பெரும்பாலும் குறியீடுகளாகவும், மனித உருவங்ளும் இருக்கின்றன. வரிசையாக நிற்கும் மனிதர்கள், குதிரையில் பயணம் செய்யும் மனிதன், காளைமாட்டின் மீது நிற்கும் மனிதன் ஆகியவை சிறப்பாக வரையப்பட்டிருந்தன.









அவற்றையெல்லாம் பதிவு செய்து கொண்டு ஊருக்குத் திரும்பினோம்.



Lat: 10 4' 23.5" Long: 77 50' 38.7



"பயணங்கள் தொடரும்

...பாலா










No comments:

Post a Comment