Saturday, 30 December 2023

வாக்கரிசிப் பாறை ஓவியங்கள், வடகாடு

  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வடகாடு அருகிலுள்ள கும்மாளமரத்துப் பட்டியிலுள்ள மலையில் வாக்கரிசிப் பாறை (வாய்க்கரிசிப் பாறை) என்ற பொடவு (புடவு/குகை) உள்ளது. அங்குள்ளவர்கள் அப்பொடவை வாக்கரிசிப் பாறை, பளியன் குகை, பாண்டியன் பாறை, பளியன் போன், அளக்கல்லு என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். வாக்கரிசிப் பாறை என்றப் பெயரைக் கேட்கும் போது இவ்விடம் ஏதோ இறப்பு சடங்குடன் தொடர்புடையது எனத் தோன்றுகிறது. இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளில் வாக்கரிசி (வாய்க்கரிசி) போடுவதும் ஒன்று. எனவே, இந்தக் குகையில் உள்ள ஓவியங்கள் இறப்புச் சடங்குடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

இங்கு மனிதர்கள், விலங்குகள் கோட்டோவியங்களாக வெள்ளை நிறத்தில் வரையப்பட்டிருக்கின்றன. இதில் சிறப்பானதாக "தூளியில்" கிடத்தப்பட்ட மனிதனை பலர் தூக்கிச் செல்வதைக் கூறலாம். உடன் வருபவர்கள் தாரை, தப்பட்டைகளுடன் வருவது காட்டப்பட்டுள்ளது. இதேக் காட்சி இதே குகையில் வேறொரு இடத்திலும் காட்டப்பட்டுள்ளது. எனவே இறந்தவர்களின் உடலுக்கு சடங்குகள் செய்யும் இடமாக இவ்விடம் இருந்திருக்க வேண்டும். தூளியில் கிடத்தப்பட்டிருக்கும் மனிதனின் தலையில் கிரீடம் போன்று ஏதோ ஒன்று காட்டப்பட்டுள்ளது. எனவே, இறந்தவர் அம்மக்களின் தலைவனாக இருக்கலாம். இந்த மலையின் அடிவாரத்தில் இரண்டு இடங்களில் கல்திட்டைகளையும் பார்த்தோம். கல்திட்டை இறந்தவருக்கு சடங்குகள் செய்யும் இடமாவும், அவரின் நினைவாகவும் அமைக்கப் படுவதாகும்.
மேலும், அவ்வூர் மக்கள் கூறும்போது இக்குகையில் பளியர் பழங்குடிகள் முன்பு வசித்ததாகவும், தற்போது வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். அவர்களைத் தேடி பயணித்து தாண்டிக்குடி அருகே பளியர் குடியிருப்பில் பார்த்தோம். நாம் அங்கு சென்றபோது அங்கிருந்த பளியர்களுடன் பேச முடிந்தது. ஒருவீட்டிலிருந்த கணவன், மனைவி இருவரும் நமக்கு பதிலளித்தனர். அவர்களிடம் வாக்கரிசிப் பாறையில் இருந்த தூளியில் கிடத்தப்பட்ட மனிதனின் ஓவியத்தைக் காட்டி அது குறித்து அவர்களிடம் கேட்டோம். அதைப் பார்த்த உடனேயே இதை இறந்து போனவர்களைத் தூளியில் வைத்து தோளில் தூக்கிப் போகின்ற இறப்புச் சடங்கு என்பதை உறுதி செய்தார்கள். தாங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை இது என்பதையும், அது போல் எடுத்துப் போகும் போது தாரை, தப்பட்டை போன்ற இசைக் கருவிகளை இசைத்து கொண்டு செல்லும் வழக்கம் உள்ளதையும் விளக்கிக் கூறினார்கள். பாறை ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள தூளிக் காட்சி பளியர்களின் இறப்புச் சடங்கு முறையுடன் பொருந்தி வருகிறது. நமது பழமையான பண்பாடு பாறைஓவியங்களில் பொதிந்துள்ளது.
- பாலா பாரதி
All reactions:
Bala Murali, திருச்சி பார்த்தி and 186 others

No comments:

Post a Comment