Sunday, 31 December 2023

கோம்பைக்காடு பாறைஓவியங்கள்

கொடைக்கானலிருந்து பழனி செல்லும் மலைப் பாதையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது கோம்பைக்காடு என்ற ஊர். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், பளியர்கள் இன மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் தொல்லியல் ஆர்வலர் திரு நாராயணமூர்த்தி அவர்கள் இங்கு பாறை ஓவியங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். அதைப்பார்க்கத்தான் போயிருந்தோம். இவை பழங்குடி பளியர்கள் வரைந்த பழங்கால ஓவியங்களாக இருக்கலாம்.
சாலையோரம் பொடங்கில் (குகை போன்ற அமைப்பு) இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ரத்தச் சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், தற்போது நிறம் மங்கி காவி நிறத்தில் காட்சி அளிக்கின்றன. பாதிக்கு மேல் அழிந்து விட்டன. பல அழியும் நிலையில் உள்ளன. ஒரு விலங்கின் மேல் இருவர் அமர்ந்திருப்பது போன்றும், ஒரு மனிதனின் தோள் மீது மற்றொரு மனிதன் ஏறி நிற்பது போன்றும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. மற்றொரு ஓவியம் ஒரு மனிதன் கையில் கோடரி போன்ற ஆயுதத்தை ஏந்தி நிற்பது போலவும், அவன் காலடியில் ஒருவன் வீழ்ந்து கிடப்பது போலவும் வரையப்பட்டுள்ளன. இது போரில் ஒருவரை மற்றவர் வென்றதை குறிப்பதாக இருக்கலாம். ஒரு நீண்ட கோட்டின் இருபுறமும் சூலம் போன்று வரையப்பட்டுள்ளது.

இந்த பாறையில் இருவிதமான கை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஒன்று கையை செங்காவி போன்ற குழம்பில் நனைத்து பாறையில் அப்படியே அச்சிடப்பட்டுள்ளது. மற்றொன்று பாறையில் கையை வைத்து கையிடுக்குகளில் கோடுகள் போன்று வரைந்து விட்டு கையை எடுத்தால் கை போன்ற வடிவம் கிடைக்கும். இது கோட்டுருவம் ஆகும். இந்த கை ஓவியங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி உலகில் உள்ள ஏராளமான பழங்காலப் பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பிரான்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இதுபோன்ற ஓவியங்கள் கிடைத்துள்ளன. உலகம் முழுவதும் மனிதர்கள் தொடர்பின்றி வாழ்ந்த காலத்திலேயே அவர்களின் சிந்தனைகள் ஒன்றாக இருந்துள்ளது இதன்மூலம் தெளிவாகிறது. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்படும் இதுபோன்ற பாறை ஓவியங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமின்றி நமக்கும் உள்ளது.

நன்றி

....பாலா

No comments:

Post a Comment