Saturday, 30 December 2023

பறவைத்தலை மனிதர்கள்

 புலிப்பட்டி, திருமயம், திருமலை, கீழ்வாலை போன்று சில இடங்களில் மனித உருவங்களின் தலைப்பகுதி பறவைத் தலையைப் போலக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற ஓவியங்கள் இருக்கும் இடங்களில் வழக்கமான வேட்டைக்காட்சிகள் அதிகம் காணப்படாமல் அவர்களின் தத்துவார்த்தமான கருத்துகளின் வெளிப்பாடாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் ஒரு வியப்பான ஒற்றுமை இவை அனைத்தும் சிவப்பு நிற ஓவியங்களாக உள்ளன.

எகிப்திய கடவுளர்களில் பறவைத் தலையுடன் கூடிய கடவுளர்கள் உண்டு. அவற்றில் தோத் என்னும் கடவுள் அன்றில் (Ibis) பறவையின் தலையுடன் காணப்படுவார். இந்த தோத் அறிவின் கடவுள். அவர் எகிப்தியர்களுக்கு எழுத்து, மருத்துவம் மற்றும் கணிதம் ஆகியவற்றை வழங்கினார் என்பர். அதுபோல ஹோராஸ் என்னும் வானத்திற்கான கடவுள் பருந்துத் தலையுடன் காணப்படுவார்.
பாறைஓவியங்களில் பறவைத் தலையுடன் காட்டப்படும் உருவங்கள் கடவுளையோ, இறந்தவர்களின் ஆன்மாவையோ குறிக்கும் என்பது நமது கருத்து. குறைந்தபட்சம் ஏதோ இயல்பானதாக இல்லாமல் உயர்வானதை (Supernatural) இவ்வாறு குறித்திருக்கலாம். பிரான்ஸ் நாட்டுப் பாறைஓவியம் ஒன்றில் காட்டெருமையால் தாக்கப்பட்டு இறந்துக் கிடக்கும் மனிதனின் தலை பறவை வடிவில் காட்டப்பட்டிருக்கும். அருகே ஒரு பறவையும் சேர்த்துக் காட்டப்பட்டிருக்கும். உடலைவிட்டு உயிர் பறவை வடிவில் பறந்து செல்கிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு வரையப்பட்டிருக்கலாம்.
உயிரின் வடிவம் பறவையாகக் கொள்வது தமிழ் மரபில் உள்ளதா? எனில், உண்டு. திருக்குறளிலேயே இதற்கான குறிப்பு காணப்படுகிறது.
" குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு " குறள்-338
பொருள் : கூடு தனியே கிடக்கப் புள் (பறவை) பறந்து போனாற் போலும், உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு.
                                                - பாலா பாரதி

All reactions:
Ashok Renu, Raveendran Natarajan and 150 others

No comments:

Post a Comment