கொற்றவையைப் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. எயினர்கள் கொற்றவையை வணங்கியதாகக் கூறப்படுகிறது. எயினர்கள் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும் மற்ற நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர். தொல்காப்பியத்தில் "கொற்றவை நிலை" என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுவதிலிருந்து கொற்றவையைத் தமிழர்களின் பழமையான பெண் தெய்வம் எனக் கொள்கிறோம். சங்க இலக்கியங்களில் பழையோள், கொற்றி, துணங்கை, காடுகிழவி, காடுகிழாள், மலைமகள் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறாள். கொற்றம் என்றால் வெற்றி, அவ்வை என்றால் அம்மை அதாவது "வெற்றியை அருளும் தாய்" என்று பொருள். பாலை நிலம் மட்டுமல்லாமல் ஐம்பெரும் நிலங்களிலும் தாய்த்தெய்வமாக வழிபடப்பட்டவள் கொற்றவை.
கொற்றவையின் வாகனம் கலைமான் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. ஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகத்தில் கொற்றவையின் வாகனமாகக் கலைமானையே குறிப்பிடுகிறார். இளங்கோவடிகள் காலம் முதல் சம்பந்தர் காலம் வரை கொற்றவையின் வாகனமாக மான் இருந்துள்ளதைக் காண முடிகிறது. பிற்காலத்தில் கொற்றவை வழிபாடு துர்க்கை வழிபாடாக மாற்றப்பட்டு மேலும் பல மாற்றங்களை அடைந்திருக்கிறது. சிற்பங்களில் காணப்படும் கொற்றவையின் அடையாளங்கள் நீண்ட காலஅளவில் மாற்றம் பெற்று வந்தவை. இதற்குத் தொடக்கம் என்று ஒன்று இருந்திருக்கும் அல்லவா? அதையே "கொற்றவையின் முந்து வடிவம்" என்கிறோம். தாய்த்தெய்வ வழிபாடாகக் கொற்றவை உருவாக்கம் பெறும்போது அதற்கு உருவம் கொடுக்க முயன்றிருப்பார்கள் அல்லவா? அத்தகைய முந்து வடிவத்தைப் பாறைஓவியங்களில் காணமுடிவது சிறப்புதானே!
மதுரை மாவட்டம் மேலூர் அருகில், புலிப்பட்டி என்னும் ஊரில் உள்ள புலிமலையில் ஒரு புடவில் சிவப்பு (அடர் காவி) நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மதுரை யானைமலையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திருமதி தேவி அறிவுசெல்வம் அவர்களால் இவ்ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எடுகோள்கள் (Pastulates)
* பாறைஓவியங்கள் பழங்காலத்தில் இருந்து அண்மைக் காலம் வரை வரையப்பட்டு வருபவை.
* குகைகளில் காணப்படும் இவ்வோவியங்கள் அனைத்தும் வேட்டை, சண்டை காட்சிகளை மட்டும் குறிப்பவை அல்ல.
* தத்துவங்கள், மெய்யியலைக் குறியீடுகளாகப் பதிவுச் செய்யப்பட்டிருக்கும் ஓவியங்களும் உண்டு.
* குகைகளில் வேட்டுவர்கள் மட்டும் தங்கி ஓவியங்கள் வரைந்து சென்றிருக்கவில்லை. மக்களுக்கு வழிகாட்டும் முனிவர்கள், துறவிகள் போன்றவர்களும் வாழ்ந்திருக்கின்றனர்.
கருதுகோள் (Hypothesis)
புலிமலையில் உள்ள குகையில் செந்நிறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மனித உருவங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மான், நாய் போன்ற விலங்குகளும் காட்டப்பட்டுள்ளன. அடர்த்தியானதும், வெளிக்கோட்டுடனும் இரு நிலைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. கோடுகளால் வரையப்பட்ட ஓவியத்தில் பெண் உருவம் ஒன்று நிற்பது போலக் காட்டப்பட்டுள்ளது. பெண் என்பதைக் குறிக்க மார்புப் பகுதியில் இரண்டு புள்ளிகள் இடப்பட்டுள்ளன. கைகளை நீட்டியவாறு உள்ள இந்தப் பெண்ணின் கால் அருகில் மான் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. நின்ற நிலையில் உள்ள பெண் உருவமும் அதன் காலருகே மான் உருவமும் சேர்ந்து கொற்றவையை நினைவு படுத்துகின்றன. இதேபோல பெண் மற்றும் மான் இணைந்த தோற்றம் இதே குகையில் மூன்று இடங்களில் காணப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே காட்சி காட்டப்படுவதால், அது குறிப்பிட்ட ஒரு பெண்ணையோ, குறிப்பிட்ட மானையோ குறிக்காமல் வழிபாட்டின் குறியீடாகக் கொள்ளமுடியும். இப்பெண் உருவத்தின் மேல்புறம் இரு இடங்களில் ஆயுதம் ஒன்று வரையப்பட்டுள்ளது. இது அங்குசமாகவோ, கோடாரியாகவோ இருக்கலாம். சண்டைக் காட்சி ஓவியங்கள் அருகில் இல்லை. எனவே, இவ்வாயுதம் பிற்காலக் கொற்றவை சிற்பங்களில் எடுத்துக்கொள்ளப் பட்டதாக இருக்கலாம்.
கேரளாவில் மறையூர் பாறைஓவியத்தில் மனித உருவம் ஒன்று நின்றவாறும் அருகே மானும் உள்ளதை கொற்றவையின் ஓவியம் என்பர். புலிமலையில் உள்ள ஓவியங்களில் அவ்வுருவம் பெண் என்பதை உறுதியாகக் காட்டியுள்ளனர். 2004 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சுடுமண் பானையோட்டின் மீது மான், பறவை, நெற்கதிர், தாய்த்தெய்வம், முதலை ஆகியன பொறிக்கப்பட்டுள்ளன. அப்பானையோட்டில் இருக்கும் தாய்த்தெய்வம் கொற்றவை என்றும் அத்தெய்வம் வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகமாக மாறிய தொல்குடிகளின் நகர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புலிமலையில் வரையப்பட்டுள்ள பெண்ணின் உருவமும், ஆதிச்சநல்லூர் பானையோட்டில் காணப்படும் பெண்ணின் உருவமும் ஒப்புமைடையவை. புலிக்குகையில் காணப்படும் பெண் உருவம் கொற்றவையின் முந்து வடிவம் என்பது நமது கருத்து. உண்மையில் அது வேறாகவும் இருக்கலாம்.
(artist Gva)
கொற்றவை தோற்றத்தில் பாறைஓவியம் கர்நாடகாவில் கண்டுபிடிப்பு.
அண்மையில் புலிப்பட்டி பாறைஓவியங்களில் பெண் உருவம் ஒன்று நிற்பது போலவும், காலருகே மானும் காட்டப்பட்ட ஓவியத்தைப் பார்த்தோம். ஒரே காட்சி அதே இடத்தில் பல இடங்களில் இருந்ததால் அது வழிபாடுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் கொற்றவையின் தோற்றத்தை நினைவூட்டுவதால் கொற்றவையின் முந்து வடிவமாக இருக்கலாம் என்றும் ஒரு கருதுகோளை முன்வைத்தோம்.
தற்போது இவ்வோவியத்தை ஒத்த தோற்றத்துடன் பாறைஓவியம் ஒன்று கர்நாடகா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது. இது திரு லிங்கன்ன சாமி K Linganna Swami அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலிப்பட்டி பாறைஓவியத்தில் உள்ளது போன்றே ஒரு பெண் உருவத்தின் காலருகில் மான் காட்டப்பட்டுள்ளது. இப்போது ஆய்வுத் தளம் சற்று விரிவடைகிறது. இதிலிருந்து நாம் மேலும் பல கருதுகோள்களை உருவாக்கலாம்.
* கொற்றவை தெய்வத்தை வழிபட்ட தமிழ்ப் போர்க்குடிகள் தென்னிந்தியா முழுவதும் பரவி இருந்தனர்.
* தென்னிந்தியாவில் இருந்த போர்க்குடிகளுக்கு கொற்றவைப் போன்று வேறொரு தெய்வ வழிபாடு இருந்துள்ளது.
* கொற்றவையுடன் தொடர்பில்லாத வேறொரு பெண் தெய்வ வழிபாடு தென்னிந்திய முழுமைக்கும் இருந்துள்ளது.
இவ்வாறு பல கருத்துகோள்களை உருவாக்கி, அது தொடர்பான தரவுகள் பாறைஓவியங்களிலோ, வேறு வடிவிலோ கிடைக்கின்றனவா என்று ஆராய வேண்டும்.
(முதல் படம் கர்நாடகா, இரண்டாவது புலிப்பட்டி)
- பாலா பாரதி
No comments:
Post a Comment