பெருமுக்கல் எனும் ஊரிலுள்ள குகையில் பழமையான பாறைக்கீறல் ஓவியங்களைப்(PETRO GLYPHS) பார்க்க வெகுநாட்களாக ஆவலாய் இருந்தேன். அதற்கு அண்மையில் வாய்ப்பு கிடைக்க நண்பர்களுடன் போயிருந்தேன்.
திண்டிவனம் - மரக்காணம் சாலையில் திண்டிவனத்திலிருந்து19 ஆவது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் பெருமுக்கல். இவ்வூர் சோழர்கள் காலத்தில் வரலாற்றுச் சிறப்புடைய பேரூராகத் திகழ்ந்திருக்கிறது என நம்முடன் பயணத்தில் கலந்துக்கொண்ட முனைவர் தமிழகன் ஐயா கூற நாங்களும் அரியசெய்தியாக இருக்கிறதே ஐயா மேலும் கூறுங்கள் எனக்கேட்க அவரும் உற்சாகமாகக் கூற ஆரம்பித்துவிட்டார்.
சோழர்காலக் கல்வெட்டில் ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் உள்ள ஒய்மா நாட்டுப் பிரிவின் முக்கிலார் கங்கைகொண்ட சோழ நல்லூர் என இவ்வூர் குறிப்பிடப்படுகின்றது. சங்க இலக்கியங்களில் பெருமுக்கில் எனக் குறிப்பிடப்படும் இவ்வூர் நற்றிணையில் 272 ஆம் பாடலை பாடிய 'முக்கில் ஆசான் நல்வெள்ளையார்' எனும் சங்கப்புலவர் பிறந்த ஊராகும், இவ்வூருக்கருகில் சிறுமுக்கல், பழமுக்கல் எனும் ஊர்களும் உள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள மலையில் முக்யாலீஸ்வரரை தெய்வமாகக் கொண்ட பழமையானக் கோயில் உள்ளது. முதலில் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் விக்கிரம சோழன் என்ற மன்னனால் கற்கோயிலாகக் கட்டப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பேசிக்கொண்டேயும் ஆங்காங்கே ஓய்வெடுத்தும் வந்ததில் களைப்பை மறந்து கோயில் வாயிலில் நின்றோம். கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் வடக்கு மண்டபத்தில் இருந்தோம் , இங்கு நான்கு வரிசைகள் கொண்ட ஏழு எண்ணிக்கையில் 28 கல்தூண்கள் உள்ளன. முன்மண்டபம், அர்த்த மண்டபத்தைக் கடந்தால் கருவறையில் ஈசனைக் காணலாம். ஈசன் லிங்கவடிவில் நாகம் அமர்ந்த திருவுருவமாகக் காட்சியளிக்கிறார். இறைவனை வழிபட்டபின் கோயிலைச் சுற்றி வந்தோம். முன்மண்டபத்தின் தரையில் ஏராளமான குறியீடுகளும் சுவரில் 11 முதல் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இங்குப் பிரதோசம், பெளர்ணமி, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதாகக் கோயில் பூசாரி கூறுகிறார். இக்கோயிலின் வெளிப்பிரகாரம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதைக்கடந்து கோயிலின் பின்புறம் வந்தால் அங்கே வீரஆஞ்சநேயர் கோயில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.
இக்கோயிலுக்கு வர மலையின் மீதமைந்தப் படிக்கட்டுகள் வழியே வரவேண்டும். வழியில் அழகிய சுனை ஒன்றும் உள்ளது இங்குச் சிறிது ஓய்வெடுத்தப்பின் பயணத்தைத் தொடர்தல் நலம். நம்மை அவ்வூரைச்சேர்ந்த ராமன் என்பவர் அழைத்துச்சென்றார். இச்சுனையில் சீதாதேவி நீராடியதாக ராமன் கூறுகிறார். கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள படிக்கட்டில் அரிவாள் மற்றும் மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் தென்கிழக்குத் திசையில் இயற்கையாக அமைந்த குகை ஒன்று காணப்படுகிறது. இதை அவ்வூர் மக்கள் சீதை குழந்தை பெற்ற இடமாகவும், வால்மீகி முனிவர் வாழ்ந்த இடமாகவும் நம்புகிறார்களாம். இதுபோன்ற பழமையான இடங்களை இராமாயணக் கதைகளுடன் தொடர்புபடுத்திக் கூறுவது வழக்கமான ஒன்றுதான்.
இக்குகை குன்றின் உட்புறம் நீண்டுச் செல்லும் இயற்கையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இக்குகையின் பாறைகளில் குறியீடுகளுடன் கூடிய பல்வேறுவகை கீறல் ஓவியங்கள்(PETRO GLYPHS) வரையப்பட்டுள்ளன. கீறல் ஓவியங்கள் என்பவை கூர்மையான கற்கள் அல்லது உலோகம்போன்ற கூர்மையான பொருட்களால் பாறையில் தொடர்ந்து தேய்ப்பதால் ஏற்படுத்தப்படும் உருவங்கள் ஆகும். இவ்வோவியங்களில் மான், மயில், படமெடுத்தநிலையிலுள்ள பாம்பு, மனிதன், வில் போன்ற உருவங்களும் தலையில்லா மனிதன் போன்ற உருவமும் காணப்படுகிறது. இக்குகை ஓவியங்களின் சிறப்பு பாறைச் சுவரில் காணப்படும் சிந்துவெளி குறியீடுகளும் பழமையான தமிழ் எழுத்துகளும் ஆகும். இவ்வெழுத்துகளை 'இராச' என தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு நடனகாசிநாதன் அவர்களும் முதல் எழுத்தை 'இ' இக்குப்பதிலாக 'கோ' எனக் கல்வெட்டறிஞர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களும் படித்துள்ளார்கள். தொல்லியல்துறையைச் சேர்ந்த திருமதி வசந்தகல்யாணி அவர்கள் புத்தகம் எழுதியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை பேராசிரியர் சு.இராசவேலு, விழுப்புரம் கல்வெட்டறிஞர் திரு வீரராகவன், பாறைஓவிய ஆய்வாளர் திரு காந்திராஜன் முதலிய அறிஞர்களும் இவ்வோவியங்களை ஆய்வுசெய்துள்னர்.
இவ்வோவியங்கள் இரும்பு காலத்திற்கு முந்தையவையென்றும், இவை கூற்மையான கற்களைக்கொண்டு தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதும் அறிஞர்களின் கருத்தாக உள்ளது. கேரளாவிலுள்ள எடக்கல் எனுமிடத்திலும் இதுபோன்ற கீறல் ஓவியங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இக்குகை ஓவியங்களை கீழ்திசை ஓலைச்சுவடியில் பணியாற்றிய திரு கண்ணையா என்பவரும் அவரது நண்பரும் முதலில் பார்த்து வெளியலகிற்கு சொல்லியிருக்கிறார்கள்.
இக்குகை அமைவிடத்தின் சற்றுத் தொலைவில் உள்ள பழமுக்கலில் பெருங்கற்கால ஈமச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குகை ஓவியங்களைப் பார்க்கப் போகிறவர்கள் கைவிளக்குககள் எடுத்துப்போதல் நலம். இக்குகை தற்போது தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேற்கே சூரியன் இறங்கத் தொடங்க நாங்களும் மலையிலிருந்து இறங்க ஆரம்பித்தோம்.
கீழே இறங்கும் வழியில் இடப்புறப்பாறையில் அகலமான கல்வெட்டு ஒன்றும் வலப்புறத்தில் அல்லிச்சுனை ஒன்றும் உள்ளது. தமிழகன் ஐயா இம்மலையிலுள்ள மூலிகைகள் பலவற்றைக் காட்டியபடியும் அவற்றின் மருத்துவ குணங்களை விளக்கியபடியும் வந்தார். தமிழக கலை வரலாற்றிற்குச் சிறப்பு சேர்க்கும் இக்குன்றின் வடபுறம் கீழ்ப்பகுதியில் பேரளவில் உடைப்பதால் சிதைவுற்று வருவது வருத்தம் தரும் செய்தியாகும்.
நன்றி
பாலா பாரதி
No comments:
Post a Comment