Saturday, 30 December 2023

பாறைஓவியத்தில் அடிலு ஏணி


பழங்காலப் பாறைஓவியத்தில் தேனெடுக்கும் காட்சியில் இன்று வழக்கொழிந்த 'அடிலு ஏணி' காட்டப்பட்டுள்ளது. குரும்பர் திணைக்குடியினர் தேனெடுக்கும் போது பயன்படுத்தும் ஏணிகளுள் ஒன்று 'அடிலு ஏணி'. நீண்ட மூங்கில் கழிகளை, குறுக்காக குச்சிகளுடன் இணைத்து உருவாக்கப்படும் இவ்வேணி 'சாரம்' அமைத்துள்ளதைப் போலக் காணப்படும். பலர் ஒரே நேரத்தில் ஏறுமாறு அமைக்கப் பட்டிருக்கும். இதில் எறுபவர்கள் எப்போதும் ஒருகையால் பிடித்திருக்க வேண்டும். எனவே, மற்றொரு கையால்தான் தேனைச் சேகரிக்க முடியும். பாதுகாப்பற்ற இம்முறையில் விபத்துகளால் உயிரிழப்புகள் நிகழ, காலப்போக்கில் இம்முறையைக் கைவிட்டுப் பாதுகாப்பான 'மால்பு ஏணி' க்கு மாறிவிட்டனர். மால்பு ஏணியில் தங்கள் உடலைக் கயிறு மூலம் இணைத்திருப்பதால் தேனெடுக்க இருகைகளையும் பயன்படுத்த முடியும். மால்பேணியில் ஒரு சமயத்தில் ஒருவர்தான் ஏறுவர். ஏணியில் ஏறுபவரின் மைத்துனர் அவரின் பாதுகாப்பை உறுதி செய்பவராக இருப்பார். தனது மைத்துனர் கொடுக்கும் ஆலோசனையை பின்பற்றி தேனெடுப்பார். மைத்துனரோ இவர் திரும்ப வரும்வரை அங்கேயே இருப்பார். தேனெடுக்கும்போது பெண்களும் உதவிக்காகக் கூட வருவதுண்டு.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கோழியூத்து பகுதியில் ஒரு பெரிய குகையில் மிகப் பழமையானவையாக் கருதப்படும் கருப்பு நிற பாறைஓவியங்களுடன் சிவப்பு, வெள்ளை நிற ஓவியங்களும் காணப்படுகின்றன. இவற்றில் வெள்ளை நிறத்தில் காணப்படும் ஓவியங்களுள் ஒன்றில் இந்த 'அடிலு ஏணி' தீட்டப்பட்டுள்ளது. மேலும் இதில் நான்கு பேர் ஏறுவதுபோலவும் காட்டப்பட்டுள்ளது சிறப்பு. பல நாட்கள் அங்குத் தங்கி தேனெடுப்பவர்கள் அந்நிகழ்வை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளனர். ஓவியத்தில் நான்கு மனிதர்கள் ஏணியைப் பற்றியவாறு ஏறுவது நன்கு தெரிகிறது. தொலைவில் இருந்து பார்ப்பவரின் கோணத்தில் வரையப்பட்ட இவ்வோவியத்தில் ஓவியர் கையாண்ட நுட்பம் வியப்பானது. குரும்பர் திணைக்குடியினரின் வாழ்வியலை பதிவுசெய்துள்ள இவ்வோவியங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை. (தற்போது மூலிகைகளைப் பயன்படுத்தி வெள்ளரிக்கோம்பையைச் சேர்ந்த கிருஷ்ணன் மரபு ஓவியங்களை வரைந்து வருகிறார். அவர் வரைந்துக் கொடுத்த ஓவியமும் புரிதலுக்காக இணைக்கப்பட்டுள்ளது).
                                                                                            - பாலா பாரதி
All reactions:
Jeevithakannan Puranar, Indran Rajendran and 27 others

No comments:

Post a Comment